‘சடக்கு’ இணையவழி ஆவண காப்பகம் மலேசியத் தமிழ் இலக்கியம், கலை, சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளையும் அவற்றை முன்னெடுத்த ஆளுமைகளையும் படங்கள், துண்டு பிரசுரங்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் வாயிலாக ஆவணப்படுத்தி பொது பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
வல்லினம் வழி முன்னெடுக்கப்பட்ட ‘மலேசியத் தமிழ் இலக்கிய ஆளுமைகளின் ஆவணப்பட திட்டம்’ இவ்விணைய உருவாக்கத்திற்கு வித்திட்டது. ஆவணப்படங்களை இயக்கிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தங்களுக்கு முந்தைய தலைமுறை ஆளுமைகள் குறித்து கூறும்போது அவ்வாளுமைகளின் படங்கள் கிடைக்காமல் திணற வேண்டிய சூழல் உருவானது.
தமிழவேள் கோ. சாரங்கபாணி, தவத்திரு தனிநாயகம் அடிகளார், முனைவர் இராம. சுப்பையா, முனைவர் இரா. தண்டாயுதம் உட்பட மிக முக்கிய ஆளுமைகளின் படங்கள் இணையத்திலும், நூல்களிலும் விடுபட்டிருப்பது, அல்லது குறிப்பிட்ட ஒரே படம் தொடர்ந்து அச்சுப்பிரதிகளாக்கப்படுவதையும் கவனிக்க முடிந்தது.
இவர்களுக்கே இந்நிலை என்றால் கால ஓட்டத்தில் மலேசிய கலை, இலக்கியம் மற்றும் மொழியின் நீட்சிக்காகப் பாடுப்பட்ட ஆளுமைகளின் அடையாளங்கள் என்னவாகும் என யோசித்தபோதே இப்படி ஒரு தளம் தொடங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. சிக்கலை கண்முன் கொண்டுவந்து காட்டிய வல்லினம் ஆவணப்பட திட்டம் அச்சிக்கலுக்கான தீர்வை நோக்கியும் நகர்த்திச் சென்றது.
இம்முயற்சியின் அவசியத்தைத் எழுத்தாளர் ம. நவீன் முன்வைத்துப் பேசி, தனக்கு அறிமுகமான நபர்களின் தொடர்புகளை எடுத்துக் கொடுப்பது, ஆலோசனைகள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டார். நூலகராகப் பணிபுரியும் எழுத்தாளர் விஜயலட்சுமி ஆவணங்களுக்கான தரவுகளின் கட்டமைப்பு, துள்ளியத்தன்மை, முழுமைத்தன்மை, ஆவணத் தேடல்களை மேற்கொண்டார். இம்முயற்சியில் எழுத்தாளர் தயாஜி இணைந்து படங்களை ஸ்கேன் செய்வது, படங்களுக்கான விபரங்களை ஆளுமைகளிடமிருந்து பெறுவது போன்ற செயல்களை முன்னெடுத்தார். எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்கள் இம்முயற்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டபோது பணிகள் இலகுவாகின. மரணித்துவிட்ட பல படைப்பாளிகளின் இல்லங்களும் அவர்களின் உறவினர்களும் சை.பீர்முகம்மது அவர்களுக்கு நன்கு அறிமுகம் இருந்ததால் அவர்கள் சேமிப்பில் இருந்த படங்களைக் கேட்டுப்பெறும் பணி இலகுவாக முடிந்தது. அகப்பக்க உருவாக்கம் விஜயலட்சுமி மற்றும் திரு. தர்மராஜ் இணைவில் உருவானது.
அவ்வகையில், வல்லினம் ஆவணப்பட இயக்கத்துக்காகச் சந்தித்த எழுத்தாளர்களின் சேகரிப்பில் இருந்த படங்கள்தான் முதலில் ஸ்கேன் செய்யப்பட்டன. அதன் பிறகு, தனிநபர்கள், இயக்கங்கள் எனப் பரவலாக தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டு 1,000க்கும் மேலான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. சுமார் ஆறு மாத கால இடைவெளிக்குள் அனைத்துப் படங்களுக்கும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, இணையத்திலும் பதிவேற்றப்பட்டது.
இத்தளம் பல மாநிலங்கள், சிறு – பெரு நகரங்கள், தோட்டங்கள் தோறும் நடைபெற்ற சமூக, கலை, இலக்கிய முயற்சிகள், செயல்பாடுகள் குறித்த 60 ஆண்டுகால பதிவுத்தொகுப்பாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தை கொண்டது. மலேசியத் தமிழ்ச் சூழலில் முழுமையான ஆவண சேகரிப்பு, அல்லது அதையொட்டிய தீவிர முயற்சிகள் இதுகாறும் மேற்கொள்ளப்படவில்லை எனும் நிலையில் இத்தளம் அம்முயற்சிக்கான ஒரு தொடக்கமாக திகழ்கிறது.
எந்தவொரு பெரும் பொருள்வசதியும், ஆதரவும் இன்றி மிகச்சிறிய அளவில் தொடங்கி பயணித்த உ. வே. சாமிநாதய்யர் முதல் ரோஜா முத்தையா போன்றோரை பின்னொட்டி சிந்தித்து பெரிய ஆள்பலம், பொருளாதாரத்தையெல்லாம் எதிர்பார்த்து, விண்ணப்பித்துக் காத்திருக்காமல் மிகச் சிறிய அளவில் இத்திட்டம் செயல்படத் தொடங்கியது.
எதை சேகரிப்பது எனும்போது அரிய புகைப்படங்கள், துண்டு பிரசுரங்கள், அறிக்கைகள், தனிச்சுற்று இதழ்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் என்கிற வரையறை முடிவு செய்யப்பட்டது. எத்துறை சார்ந்த ஆவணங்கள் எனும்போது குறிப்பாக கலை, இலக்கியமும் பொதுவாக சமூகமும் சார்ந்து இயங்கிய ஆளுமைகள், கலை இலக்கிய சமூக நிகழ்ச்சிகள் என்கிற வரையறையும், காலக்கட்டம் – 1960கள் தொடங்கி 2000வரை என்கிற வரையறையும் வைக்கப்பட்டது.
அதேவேளை, ஆவணங்கள் சேகரிக்கப்படும்போது கிடைப்பவை 2000க்கு பிந்தையவையாக இருந்தாலும் அவற்றை சேகரித்து வைக்கவும் தவறவில்லை. ஒவ்வொரு ஆவணமும் நிர்ணயிக்கப்பட்ட உயர்தெளிவில் (High resolution) ஸ்கேன் செய்யப்பட்டு இணையப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. ஒவ்வொரு ஆவணத்திற்கும் அழைப்பு எண் (Call number ID), நிகழ்ச்சி, ஆளுமை, ஆண்டு, ஆவணத்தைப் பங்களித்தவர் ஆகிய விபரங்கள் தமிழில் கொடுக்கப்பட முடிவானது.
‘சடக்கு’ இணையத்தளத்தின் இன்றைய தேவைகள் சில பின்வருமாறு கூறலாம்.
- ஆவணங்களின் ஆயுட்காலம் நீட்டிப்படையும்;
- மிக எளிமையாக அணுகி பயனடைய முடியும்;
- அசல் பிரதியின் சாயலை இணையத் தரவிலும் பயனர்கள் முழுமையாக உள்வாங்க முடியும்;
- உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியும்;
- எல்லா இடங்களிலிருந்தும் உடனடியாக பயன்படுத்த முடியும்;
- நிகழ்ச்சி, ஆளுமை, ஆண்டு என்கிற அடிப்படையில் ஒவ்வொரு ஆவணத்திற்கும் விபரங்கள் இருப்பதன்மூலம் மிக சுலபமாக பல தரப்பட்ட தேடுதல்களை மேற்கொள்ள முடியும்;
- இது தொடர் நடவடிக்கை என்பதால் புதியனவற்றை சேர்க்கவும், பழையனவற்றில் செரிவாக்கங்கள் செய்யவும் முடியும்;
- இவற்றோடு மேலும், ‘சடக்கு’ இணையத் தளத்தில் பதிவிடப்படும் அனைத்து தரவுகளையும் Google, Yahoo, Bing, Ask.com, AOL.com, Baidu, Wolframalpha, DuckDuckGo போன்ற பலவகை தேடுபொறிகளிலிருந்தும் தேடி அணுக முடியும்.
இந்த இணையத்தளம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்படுவதுதான் இம்முயற்சியின் வெற்றியா என்று கேட்டால் நிச்சயம் அதுவல்ல. இத்திட்டம் வல்லினம் எனும் குழுமத்தின் திட்டமாக மட்டும் சுருங்கி, சுணங்கிவிடாமல் எழுத்தாளர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் என அனைவரும் தங்களது சேகரிப்பில் இருக்கும் ஆவணங்களை வழங்கி இவ்விணையத்தளத்தின் சேகரத்தை பெருக்குவதும், ஆவணங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விபரங்களை மேலும் செரிவாக்க உதவுவதும், இவ்விணையத் தளத்தை பரவலாக அறிமுகம் செய்வதும், பகிர்வதும், விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதும் ஆவணம் செய்வதும்தான் இத்திட்டத்தின் வெற்றியாக இருக்க முடியும்.
அதேசமயம், ‘சடக்கு’ இணையத்தள திட்டம் காப்பகப்படுத்துதலின் ஒரு பகுதியை மட்டுமே செய்கிறது எனும் நிதர்சனத்தையும் இவ்விடம் புரிந்து கொள்ள வேண்டும். காப்பகப்படுத்துதலில் அசல் ஆவணங்களைச் சேகரிப்பது, பராமறிப்பது, இயற்பியல் அழிவை தள்ளிப்போடுவது, புதுப்பிப்பது எனும் மேலும் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றை மேற்கொள்ள இடம், பொருள் செலவுகள் இருப்பதோடு அதை தொடர்ச்சியாக செய்ய ஆள் பலமும் தேவையாகிறது. அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது காலத்தின் தேவையும்கூட.